சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 25ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மகன் சுகாஸ் (21) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சுகாஸ் கையால் அவரது தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், அவருக்கு தாடை பகுதி முழுவதும் உடைந்து காதில் இருந்து ரத்தம் வரத் துவங்கியது. இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தந்தையை தாக்கிய மகன் சுகாஸை நீலாங்கரை போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சுய நினைவு இல்லாமல் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயபாஸ்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சுகாஸ், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.