தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24ம்தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்கள் அழைத்துக் கொண்டு சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளார். காசாங்கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் எடுத்துக்கொண்டு வெடிவெடித்து மேளதாளங்களுடன் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வல்லவன் (41) ரவி (43) சுமதி (43) அருண் (30) ராஜதுரை (31) ஆகியோர் எங்கள் வீதி வழியாக சீர்வரிசையில் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறியதையடுத்து இருதரப்பினரும் தகராறு செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இத்தகராறு குறித்து புருஷோத்தமன் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் தன்னை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன், வல்லவன், ரவி, சுமதி, அருண்குமார், ராஜதுரை ஆகிய ஆகிய 5 நபர்கள்மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கடந்த 25ம்தேதி அருண்குமாரை கைதுசெய்ய விக்கரமங்கலம் காவல்நிலைய போலிசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அருண்குமார் வீட்டில் இல்லாததால் அதே கிராமத்தில் உள்ள அருண்குமாரின் மாமனார் செம்புலிங்கம் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது
ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலிசார் செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செம்புலிங்கம் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செம்புலிங்கத்தின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவர்கள் அளித்த தகவிலின்பேரில் போலிசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவ்வாக்குமூலத்தில் செம்புலிங்கம் தனது வீட்டிற்கு தலைமைக் காவலர் பழனிவேல் தலைமையில் இரண்டு காவலர்கள் சீருடையிலும், மற்ற ஆறுபேரில் மப்டியிலும் வந்து மருமகன் அருண்குமார் குறித்து விசாரனை செய்ததாகவும், அவர் வீட்டில் இல்லை என்று கூறியபிறகும், தன்னையும், தனது மனைவி சுதா மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரை போலிசார் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் செம்புலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரது உறவினர்கள் அவரை அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து திருச்சியில் உள்ள மாருதி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சிகிச்சை பலன்அளிக்காமல் செம்புலிங்கம் கடந்த 8ம்தேதி காலை உயிரிழந்தார். இதனையடுத்து பாமகவினர் செம்புலிங்கத்தை தாக்கிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ஒருவருக்கு வேலையும் 50 லட்சம் ரூபாய் பணமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் மேலும் செம்புலிங்கத்தின் உடற்கூறு ஆய்வின் போது தங்களைச் சார்ந்த ஒருவர் இருக்க வேண்டும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு மனுதாக்கல் செய்திருந்தார் இந்த மனுவின் மீது உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் 12 மணிக்குள் உடற்கூறு ஆய்வை முடித்து உறவினர்களிடம் உடலில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ், செம்புலிங்கம் இறப்பு குறித்து பாமக வழக்கறிஞர் பாலு தலைமையில் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்த கூறியுள்ளார். அக்குழுவினர் இன்று மதியம் காசான்கோட்டை கிராமத்திற்கு வருகை தர உள்ளனர். எனவே அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் போலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாமக கட்சியினர் ஒருங்கினைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடும் என்பதால் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வஜ்ரா வாகணம், துப்பாக்கி ஏந்திய போலிசார் பணியில் உள்ளனர். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு இரு சாதியினருக்கு இடையே வன்மம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்படுள்ளது.
போலிசாரின் தாக்குதலால் உயிரிழந்தாக கூறப்படும் செம்புலிங்கத்தின் உடல் அவரது சொந்தஊருக்கு எடுத்து வந்தபிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தலைவர்கள் வருகையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கு போலிசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.