காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான சரவணன் என்ற பிரபாகரனை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ரவுடி சரவணன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் பிரபல ரவுடி வசூல்ராஜாவின் கூட்டாளிகளான காஞ்சிபுரம் பல்லவமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரகு என்ற ரகுவரன்(32) மற்றும் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி அசேன் என்ற கருப்பு அசேன்(29) ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாமுல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரபாகரனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிவகாஞ்சி போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி ரகுவரன் மற்றும் கருப்பு அசேன் ஆகியோர் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்பட போலீஸார் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று ரவுடிகளைச் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது ரவுடிகள் இருவரும் போலீஸாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் போலீஸார் தற்காப்புக்காக இருவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரகுவரன் மற்றும் கருப்பு அசேன் ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.