வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் வேலூர் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய ஒரு பேச்சின் வீடியோவை திரையிட்டு காட்டினார்.
பின்னர் நீதிபதி, இந்த பேச்சுக்காக பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை போலீசார் இன்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். எனவே இன்று பொன்முடி மீது சென்னை உள்பட பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.