சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த முதியவர்
திருச்சி புத்தூர் நான்கு ரோடு பாத்திமா தெரு சந்திப்பு பகுதியில் சாலை ஓரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார் .இது குறித்து புத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ்குமார் உறையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட்.. 2 பயணிகள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயன் பத்தை கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). இவர் அபுதாபியில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது இவரது உடமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் திருச்சியில் இருந்து ஏர்லைன்ஸ் விமான மூலம் சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சை மாவட்டம் ஏழுபட்டியைச் சேர்ந்த குணசேகரன் மகன் சிவா (வயது 22 )என்ற வாலிபரின் உடைமைகளை பரிசோதித்த போது அவர் போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷன் அதிகாரி முகேஷ் ராம் கௌதம் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.