வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். இந்த படத்தை கமலஹாசன் தயாரித்து உள்ளார்.
இந்த படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டப்படுவதாக இஸ்லாமிய அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேனாம்பேட்டை போலீஸார், போராட்டக்காரர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.இதேபோல், ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமரன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல கமல் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.