கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சஞ்சய்ராஜா என்பவர் மீது கொலை உள்பட பல குற்ற வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை மலையில் ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக விசாரணையில் தெரிவித்தார்.
அதன் பேரில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய சஞ்சய்ராஜாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, எஸ்.ஐகள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர், எஸ்.எஸ்.ஐ. ஆனந்தகுமார், போலீஸ்காரர் ஸ்ரீதர் ஆகியோர் இன்று காலை 6 .30 மணி அளவில் அழைத்து சென்றனர்.
கரட்டுமேடு முருகர் கோயில் வடபுரம் உள்ள மலை சரிவிற்கு அழைத்து சென்றபோது அங்கு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சஞ்சய்ராஜா , இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட்டான். சமயோசிதமாக மரத்திற்கு பின்னால் மறைந்து உயிர்தப்பினார் இன்ஸ்பெக்டர்.
அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத சஞ்சய்ராஜா இன்ஸ்பெக்டரை நோக்கி, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை வெறியுடன் மீண்டும் சுட்டான். அந்த குண்டும் குறிதவறி விட்டது.
தங்களை காத்துக்கொள்ளவும், எதிரியை மடக்கி பிடிக்கவும் வேறு வழியின்றி எஸ்.ஐ. சந்திரசேகர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சஞ்சய்ராஜா இடது கால் முட்டியில் சுட்டார். இதில் அவன் காலில் குண்டு பாய்ந்து கீழே சாய்ந்தான். பின்னர் அவனிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவனை கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ரவுடிகள் வேட்டை தொடங்கி விட்டது. கோவையில் ஏற்கனவே கொலை கைதிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து திருச்சி, சென்னை, மதுரை என பல இடங்களில் ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இன்று மீண்டும் கோவையில் கொலை வழக்கு ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் ரவுடிகள் பீதியடைந்து உள்ளனர்.