தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் இதனை தடை செய்ய கோரி ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாகூர் கந்தூரி விழாவில் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இஸ்லாமியர்களில் தனிப்பிரிவினர் அனுமதி கேட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த இஸ்லாமியர்கள் 50க்கும் மேற்பட்டோர், பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்காத காவல்துறையை கண்டித்தும், கந்தூரி விழா என்ற பெயரில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுவை, மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் வழங்கி, கந்தூரி விழாவில் பிரச்சாரம் செய்ய அனுமதி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவை, தடை செய்ய கோரி இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- by Authour
