கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமா கார்கி. பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் . பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் உமா கார்கி, கருத்துக்களை பதிவிட்ட நிலையில் திமுகவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட ஐடி விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உமா கார்க்கியை கைது செய்தனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி உமா கார்கியை 15 நாட்கள் சிறையிலடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் உமா கார்கியை போலீஸ் காவில் எடுத்து விசாரணை நடத்த கோவை நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் அனுமதி அளித்துள்ளார். ஒருநாள் விசாரணைக்கு அனுமதித்து இன்று மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.