நடிகை நயன்தாராவை கதையின் நாயகமாக வைத்து அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. தனது தனிப்பட்ட குறைகள் மற்றும் தந்தையின் எதிர்ப்பு என பல தடைகளை மீறி உணவு தயாரிப்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம்பெண் ஒருவரின் போராட்ட கதையை அன்னபூரணி .
சென்னை கனமழை நேரத்தில் வெளியானது உள்ளிட்ட சில காரணங்களால் அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியடைந்தது. எனவே அதன் தயாரிப்பாளர்கள் உடனடியாக திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட ஏற்பாடு செய்தனர்.
நெட்ஃபிளிக்ஸில் வெளியான அன்னபூரணி தமிழ் மட்டுமன்றி தென்னிந்திய மொழிகளோடு இந்தியிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கூடவே சர்ச்சைகளையும் சேர்த்துள்ளது. ஆச்சாரமான குடும்பத்தில் பிறக்கும் பெண் ஒருவர் அசைவம் சமைக்கத் தயாராவதையும், அதனை நியாயப்படுத்துவதற்காக திரைப்படத்தில் வைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்களை முன்வைத்தும் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மும்பையை சேர்ந்த ரமேஷ் சோலங்கி அளித்துள்ள புகாரில் அன்னபூரணி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் இந்தியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் மும்பை காவல்துறை மற்றும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை கோரியுள்ளார். அது தொடர்பான தனது சமூக வலைதளப் பதிவில் பிரதமர் மோடியையும் கோர்த்துள்ளார்.
இவை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, நடிகை நயன்தாரா உட்பட 8 பேரை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது புகாரில் சோலங்கி கோரியுள்ளார்.
திரையரங்கில் சுருண்ட அன்னபூரணி திரைப்படம், புதிய சர்ச்சைகள் காரணமாக ஓடிடி-யில் வெளியீட்டில் பெரும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.