நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் காதல் சுகுமாரனுக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் காதலித்து வந்ததாக பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் சுகுமாரன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியும், தன்னிடமிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நகை பணம் வாங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்க்கிறார் என துணை நடிகை புகார் தெரிவித்துள்ளார். தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த நடிகர் சுகுமாரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் சுகுமார் கலகலப்பு, பொன்னான நேரம்,விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் இவர் பிரபலமானார்.