சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற இடத்தில் நேற்று மாலை ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு ரூ.15ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் டிக்கெட் வாங்கிய பல்லாயிரகணக்கானவர்கள் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கே செல்ல முடியவில்லை. நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான மக்கள் அடைத்து வைத்ததால் மக்கள் இடிபாடுகளில் சிக்கி வேதனையை அனுபவித்தனர். அத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பல மணி நேரம் மக்கள் சாலைகளில் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் பகீரப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை இது தொடர்பாக பேட்டி அளித்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். அதனைத்தொடர்ந்து மதியம் 1.45 மணி அளவில் கமிஷனர் அமல்ராஜ் இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்து 30 நிமிடம் ஆய்வு நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த இசை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி பெறப்பட்டது. அதில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். ஆனால் 40 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். ஏன் அப்படி அனுமதிக்கப்பட்டார்கள், கூடுதல் டிக்கெட் விற்கப்பட்டதா என விசாரிக்கப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு இருக்க விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அந்த விசாரணைக்கு பிறகு தான் தவறு எங்கே நடந்தது என தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.