பல கல்வி நிலையங்களில் மாணவிகளிடம் அத்துமீறல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதுபற்றி வெளியே சொன்னாமல் தங்களுக்கு அவமானமாகி விடுமோ என பயந்து பலர் இதனை வெளியே சொல்வதில்லை பிரச்னை முற்றிய பிறகே வெளியே வருகிறது.
இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீஸ் அக்கா தமிழகம் முழுக்க வர இருக்கிறார்.யார் அந்த போலீஸ் அக்கா என்று தானே கேட்கிறீர்கள்?
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இவர் அங்கு பதவியேற்றதும் பல இடங்களில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பிரச்னை இருப்பதை அறிந்து அதற்கு 2022ல் ஒரு நடவடிக்கை மேற்கொண்டார். அவர் தான் போலீஸ் அக்கா.
இதன்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் பெண் போலீசார் ஒருவர் நியமிக்கப்படுவார். கான்ஸ்டபிள் முதல் எஸ்.எஸ்.ஐ. வரை இந்த பொறுப்பில் நியமிக்கப்படுவார். இவருக்கு பெயர் தான் போலீஸ் அக்கா. கல்லூரி தொடங்கிய நாளில் இவரை அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் அறிமுகம் செய்து வைத்து விடும். அவரது செல்போன் எண் கல்லூரி அறிவிப்பு பலகையில் இருக்கும்.
மாணவிகளுக்கு பிரச்னை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் அந்த போலீஸ் அக்காவுடன் தொடர்பு கொண்டு பிரச்னைகளை தெரிவித்தால்…. அக்கா ஒடோடி வந்து பிரச்னையை பேசி தீர்வு காண்பார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பார். ஆனால் பிரச்னையின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். எனவே துணிந்து போனில் புகார் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஏராளமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது.
போலீஸ் அக்கா மாணவிகள் மத்தியில் மட்டுமின்றி, பெற்றோர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. எனவே இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க அமல்படுத்துவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் போலீஸ் அக்கா வலம் வருவார் என தெரிகிறது.