காஞ்சீபுரம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரபாகரன் என்ற சரவணன் (30). இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தம்பி கார்த்திக் என்ற நெல்சன் மண்டேலா (22). இவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல குற்ற வழக்குகள் இருந்து வருகிறது. இவர்கள் 2 பேரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளாக இருந்து வந்த நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தியாகு. இவர் அரிசி வியாபாரி ஆவார். இவரை சில மாதங்களுக்கு முன்பு போன் மூலம் தொடர்பு கொண்ட சிலர் பிரபாகரின் தம்பி எனவும், பிரபல ரவுடியின் கூட்டாளிகள் எனவும் மிரட்டி தியாகுவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக தியாகு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் செல்போன் நம்பரை டிராக் செய்தனர். இதில் கோயம்புத்தூரில் இருந்து தொடர்பு கொண்டது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் பிரபாகர் மற்றும் அவனது தம்பி கார்த்தி (எ) நெல்சன் மண்டேலா ஆகிய இருவரும் பேச வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகர் மற்றும் அவனது தம்பி நெல்சன் மண்டேலா ஆகியோரை தேடி வந்த நிலையில் இருவரும் காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது இருவரும் கத்தியைக் காட்டி போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக போலீசார் இவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக கூறியதும், திடீரென இருவரும் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் காஞ்சீபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்ததையடுத்து இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.