ஜம்மு – காஷ்மீர் அருகே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. இதை நம் அண்டை நாடான பாக்., நிர்வகித்து வருகிறது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 10ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், 100 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, முக்கியமான பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை இறங்கியது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்துள்ளது. இன்று (மே 15) ஐந்தாவது நாளாக போராட்டம் வலுத்துள்ளது. முசாபராபாத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டணங்கள் மற்றும் கோதுமை மானிங்களுக்காக ரூ.23 பில்லியன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 40 கிலோ கோதுமை மாவுக்கான விலை ரூ.3100யில் இருந்து ரூ.2000 ஆக குறைத்துள்ளார்.