மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முத்தூர் வடுகவிருட்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 90). இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை தனது கண்ணுக்கு மருந்து போட அழைத்துள்ளார். அங்கு சென்ற அந்த சிறுமி கண் மருந்தை பெற்று நாராயணசாமியின் கண்ணில் போட்டுள்ளார். அப்போது நாராயணசாமி சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். கூச்சலைக் கேட்டு சிறுமியின் உறவினர் ஒருவர் ஓடி வந்து சிறுமியை மீட்டு அந்த முதியவரை திட்டி விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நாராயணசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நாராயணசாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.