திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (57).
இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள அன்பு நகரில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சௌந்தர்ராஜன் பெரம்பலூர் அருகேயுள்ள கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளித் தலைமையிடம் பல முறை புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் ஆசிரியர் மீது எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் சௌந்தரராஜனின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கடந்த 14ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி புகாரைப் பெற்றனர். சௌந்தர்ராஜனிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலும் இது போன்ற பாலியல் தொந்தரவு சம்பவங்களில் ஈடுபட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து சௌந்தரராஜன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மறுநாள் ரத்த அழுத்தம் சீரானதைத் தொடர்ந்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.