இமயமலைப் பகுதியில் இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய சிறு நகரம்தான் ஜோஷிமத். ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படும் இந்த மலை நகரம், ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 6 ஆயிரத்து 150 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. பத்ரிநாத் போன்ற புகழ்பெற்ற இந்து புனிதத்தலங்களுக்கும், ஹேமகுந்த் சாகிப் என்ற சீக்கிய புனிதத்தலத்துக்கும் நுழைவாயிலாக ஜோஷிமத் உள்ளது. ஆதிசங்கரர் நிறுவிய 4 பீடங்களுள் ஒன்றும் இங்கு அமைந்திருக்கிறது. இமயமலை மலையேற்ற பாதைகள் துவங்கும் இடமாகவும், இமயமலையின் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான தொடக்கப்புள்ளியாகவும் இந்த நகரம் அமைந்திருக்கிறது. சீனா எல்லையையொட்டிய நகரம் என்பதால் பிரதான ராணுவ தளமாகவும் உள்ளது. இப்படி ஆன்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சுற்றுலா ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள ஜோஷிமத்தான், தற்போது ‘புதையும் நகரம்’ ஆகியிருக்கிறது. கடந்த 15 நாட்களில் இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளிலும், சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு கோவில், மண்ணுக்குள் புதையுண்டது. சில இடங்கள் சரிந்து விழுந்தன. இந்த சம்பவங்கள், ஜோஷிமத்தில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் பேரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எந்நேரமும் ஒட்டுமொத்த நகரமும் பூமிக்குள் விழுங்கப்பட்டுவிடுமோ என்று பீதியில் உறைந்திருக்கிறார்கள். அதையடுத்து இங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியிருக்கிறது. இதுவரை சுமார் 600 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜோஷிமத் நகரில் அதிகாரிகளும், நிபுணர்களும் முகாமிட்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக இன்று பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியது. பிரதமர் அலுவலக செயலாளர் மிஸ்ரா தலைமையில் பல்வேறு துறைசார் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.