Skip to content
Home » பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

சேலம் வட்ட பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்துக்கு நேற்று காலை மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் வந்தார். அங்கு மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லாததால், தனது லெட்டர் பேடில் ‘அறிவிப்பு’ என்ற தலைப்பிட்டு, , சூப்பரின்டென்ட் இன்ஜினீயர், எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர் ஆகியோர் கடந்த 3 நாட்களாக அலுவலகம் வராமல், சொந்த வேலை சம்பந்தமாக அரசு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். போன் செய்தேன், எடுக்கவில்லை. ஆகவே, இவர்கள் மீது துறை வாயிலாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் மற்றும் மாநில (பொதுப்பணித்துறை) அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன், என்று எழுதி கையொப்பமிட்டு அந்த லெட்டர் பேடை அலுவலகத்தின் வாசலில் ஒட்டினார். இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் பொதுப்பணித் துறை மேற்பார்வை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் மகாவிஷ்ணு ஆகியோர் வந்தனர். இந்நிலையில், அங்கு வந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், மேற்பார்வை பொறியாளர் அறைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்ப வந்து, எம்எல்ஏ சதாசிவம் ஒட்டியிருந்த அறிவிப்பு கடிதத்தை கிழித்து எடுத்து விட்டு எம்எல்ஏ சதாசிவத்தை அழைத்துக்கொண்டு மீண்டும் மேற்பார்வை பொறியாளரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ அருள் கூறுகையில், ‘சதாசிவம் எம்எல்ஏ தனது தொகுதிக்கு 10 பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள் கேட்டிருந்தார். அதில் 2 மட்டுமே தற்போது வந்துள்ளது. மேலும் முக்கியமான 4 கட்டிடங்களை கேட்டிருந்தார். தமிழக முதல்வர் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக அதிகாரிகள் வெளியே சென்றுவிட்டதால், ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தற்போது, அவர் கேட்டிருந்த கட்டிடங்கள் அடுத்த பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்’ என்றார்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ சதா சிவம் கூறுகையில், ‘மேட்டூர், குஞ்சாண்டியூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில், வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் காவிரி பாலம், சுகாதாரத்துறை குடியிருப்பு ஆகியவை பழுதடைந்துள்ளன. இந்த கோரிக்கைகள் டெண்டரில் வரவில்லை.

எனவே, 3 முறை வந்திருந்தும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. அதனால், கோபத்தில் இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டிய தாகிவிட்டது. அதிகாரிகள் 2 மாதத்துக்குள் மேட்டூர் தொகுதிக்கு வேண்டிய கட்டிடங்களை அமைச்சரிடம் தெரிவித்து, கட்டிக் கொடுப்பதாக தெரிவித்தனர்’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!