Skip to content

பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகளான ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த ராமதாஸ், தான் சொல்வதை கேட்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு போகலாம் என்று தெரிவித்தார். அப்போது அன்புமணி, சென்னை பனையூரில் தனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளதாகவும், அங்கே தன்னை வந்து பார்க்கலாம் எனவும் கூறி செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார். இதனால் பாமகவில் பிளவு ஏற்பட தொடங்கியது.

இந்நிலையில், அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி கடந்த 3 நாட்களுக்கு முன் ராமதாஸ் அறிவித்தார். இனி நானே தலைவர், அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் கூறினார்.

ராமதாசின் இந்த அறிவிப்பு, பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்புமணியை நீக்கியது, நீக்கியதுதான். இந்த விவகாரம் தொடர்பாக என்னை சமாதானப்படுத்த நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று ராமதாஸ் கறாராக தெரிவித்தார். இதனை தொடர்ந்து  ராமதாசை சந்திக்க காத்திருந்தவர்கள்,  அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர்.

ராமதாஸ் பிடிவாதத்தால் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் அவரது மகள்கள் ஸ்ரீ காந்தி, கவிதா குடும்பத்தினரும், சென்னை இசிஆர் பனையூரில் உள்ள அன்புமணி வீட்டில், அவரது மனைவி சவுமியா, மருமகன் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் இரவு அன்புமணி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘பொதுக்குழு கூட்டி தேர்தெடுக்கப்பட்ட நானே பாமக தலைவராக தொடர்வேன். 2026 சட்டமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணி அமைப்பது எனது கடமை’ என்று கூறியிருந்தார். இதன் மூலம் தந்தை-மகன் இடையே நடக்கும் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்தது வெட்ட வெளிச்சமானது. இதனால் பாமகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தெரிவித்த ராமதாஸ், நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்துக்கு வந்த கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மட்டும் சந்தித்து பேசினார். ராமதாசுடன் ஆலோசனை நடத்திவிட்டு இரவு 10 மணியளவில் வெளியே வந்த ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமதாசும், அன்புமணியும் விரைவில் ஒன்றாக இணைந்து மாநாடு நடத்துவார்கள்’ என்றார். தொடர்ந்து, அன்புமணி நான்தான் தலைவர் என்று கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஜி.கே.மணி பதிலளிக்கவில்லை.  பிளவு சரியாகுமா என்று கேட்டதற்கு  பிளவு என்று சொல்லாதீர்கள் என்றார்.

பாமக தலைவராக நானே தொடர்வேன் என்று அன்புமணி அறிக்கையை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பாமகவின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்துக்கு வரவேண்டும் என நேற்று காலை ராமதாஸ் அழைப்பு விடுத்தார். உடனே, தைலாபுரம் தோட்டத்துக்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ஆடுதுறை  பேரூராட்சி தலைவர்  ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட 12 நிர்வாகிகள் அடுத்தடுத்து விரைந்தனர். அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘சுமுகமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

இருவரும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்’ என கூறிவிட்டு உள்ளே சென்றார். இதை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை நடைபெற்றது. அதில், ‘நிர்வாகிகள் யாரும் சோர்ந்து போகாதீர்கள், சில தினங்களில் சலசலப்பு சரியாகிவிடும்’ என ராமதாஸ் பேசியதாக கூறப்படுகிறது.

நான்தான் தலைவர் என அன்புமணி அறிவித்ததால், பாமக அவசர பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து ராமதாஸ் பேசியதாக கூறப்படுகிறது. இதேபோல், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தந்தைக்கும், மகனுக்கும் இடையே அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளதால் பாமகவில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் என இரு அணிகளாக பிரிந்து செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அன்புமணி, பின்னர் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மே 11ம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடக்க உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மே 11ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த, மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பாதுகாத்து, தமிழ்நாட்டில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களும் மக்கள் தொகை மற்றும் சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீட்டில், கல்வியில், வேலை வாய்ப்பு வழங்கி, முன்னேற வேண்டும், மதுவை ஒழிக்க வேண்டும், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை அழிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த மாநாட்டை ராமதாஸ் தலைமையில் நடத்த இருக்கிறோம். பாமகவில் நடக்கும் விவகாரம் எங்களது உள்கட்சி விவகாரம். இது, எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அவருடைய கொள்கையை நிலைநாட்ட பாமகவை ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக மாற்ற உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன், வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கரையில் உள்ள அன்புமணி இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அன்புமணி-ராமதாஸ் இடையே நடக்கும் மோதலுக்கு முகுந்தனும் ஒரு காரணம். அவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்ததால் இருவருக்கும் மோதல் போக்கு தொடங்கியது.

இதனால், அன்புமணியை முகுந்தன் சமாதானம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பனையூரில் உள்ள அலுவலகத்திலும் முக்கிய நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். அன்புமணியை சந்தித்து பேசிய பின், தைலாபுரம் சென்று ராமதாசுடன் முகுந்தன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அன்புமணியுடன் நடந்த சமாதான பேச்சு குறித்து விளக்கமாக எடுத்து சொன்னாராம்.

தனது உத்தரவுக்கு அன்புமணி கட்டுப்படாவிட்டால்,  பொதுக்குழுவை கூட்டி  அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும்  ராமதாஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  சித்திரை முழுநிலவு பெருவிழா மே 11ம் தேதி நடக்கிறது.  அதற்குள்  அன்புமணி  இசைந்து வராவிட்டால்,  பொதுக்குழுவை கூட்டுவதற்கு  ராமதாஸ் உறுதியுடன் இருப்பதாக  கூறப்படுகிறது.

 

error: Content is protected !!