பாமக , தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட்டு உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் கலந்துகொண்டு பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்;
* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் உச்சவரம்பை நீக்குவதற்கு பா.ம.க. நடவடிக்கை மேற்கொள்ளும்.
* தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பா.ம.க. பாடுபடும்.
* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும். * கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத்துறை, பொதுத்துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். * தனியார் துறை, நீதித்துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும். * மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
* தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். * தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். * தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும். * நெருக்கடி நிலைக்காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.
மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை. * ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50 சதவீதத்தை அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். * சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும். * தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.
* மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும். *
* வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும். அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. வலியுறுத்தும். * உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும். * ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை. * அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வசதியாக புதிய ஆணையம். * 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்
மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். * சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு மானியம் ரூ.6,000ல் இருந்து ஏக்கருக்கு ரூ.10,000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும். * வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி. * பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி.
* நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும். * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண்மைக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும். * தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டுவதன் மூலம் உழவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க செய்வதே இதன் நோக்கமாகும்.
* தொழில் திட்டங்களுக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்த தடை விதிக்கப்படும். * கடலூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும். * குறிப்பிட்ட காலத்திற்குள் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை. * மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களுக்குத் தடை விதிக்கப்படும். * தமிழ்நாட்டை அணுஉலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கால அட்டவணை வெளியிடப்படும். * காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
* புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும். * தமிழ்நாட்டின் நலனுக்காகக் கோதாவரி மற்றும் காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். * தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கொண்ட ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசனப் பெருந்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.
*மேகதாது அணைக்குத் தடை:-* * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும். * முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். * பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரியின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசின் மூலமாக பா.ம.க. தடுத்து நிறுத்தும். * தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு நச்சுக்கழிவுகள் கலப்பால் முழுமையாகச் சீரழிந்திருக்கிறது. தாமிரபரணி ஆற்றைச் சீரமைத்து அதன் பழைய நிலைக்கு மீட்டுருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். * காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, நொய்யல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் தூய்மைப்படுத்தவும், கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
** இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். * தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். * ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளில் 20 லட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டுத் தொழிற்பயிற்சி வழங்கப்படும். 10 மாதப் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும். * இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும். * சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும், கடனுதவியும், தேவையான பிற வசதிகளும் கிடைப்பதற்கும் பா.ம.க. பாடுபடும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும். * மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும். * விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் மானிய விலையில் வழங்கப்படும். * உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை இப்போதுள்ள 33 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தவும், அதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றவும் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
* 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் என்று அறிவிக்கப்படுவார்கள். * பெண் குழந்தைகளுக்காக தனி விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும். * குழந்தைகளுக்கு ஆளுமைக் கல்வி, இணையப் பாதுகாப்புக் கல்வி வழங்கப்படும். * ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை. * அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும். * மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்துப் பரிந்துரைக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும்.
* அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 10 சதவீதம் ஆண்டு வட்டி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். * சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய & மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.
* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். * மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு:- * நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.
இதுபோல மேலும் பல்வேறு திட்டங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.