மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நி்லையில் தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டும் பலமாக உள்ளது. அதில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுகவும், பாஜகவும் தனித்தனி அணிகள் அமைத்து போட்டியிட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இரு கட்சிகளும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க பல யுக்திகளை கையாண்டு வருகிறது. நேற்று காலை பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என செய்திகள் வந்தன. அதை பாமக மறுத்தது. அதே நேரத்தில் பாஜகவுடன் சேர பாமக பேச்சு நடத்துகிறது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் மதியம் 12 .15 மணி அளவில் நிறைவடைந்தது. கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேச நலன், மாநில நலன் கொண்ட கட்சிகளுடன் பாமக கூட்டணி சேரும். கூட்டணியை டாக்டா் ராமதாஸ் தான் முடிவு செய்வார் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவின்படி பாமக இன்னும் தனது பிடியை விட்டுக்கொடுக்காமல் உள்ளது. அதாவது எந்த கூட்டணி மூலம் தங்களுக்கு அதிக சீட்கள் கிடைக்குமோ அங்கு சேரலாம் என்ற முடிவில் பாமக இருப்பதாக கூறப்படுகிறது.