இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்குச் செல்கிறார். நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார். ராமநவமி என்பதால் மதியம் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர், ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறனர்.
