பீகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் எவ்வாறு வீட்டுக்கு வழியனுப்பி வைக்கப் போகிறார்கள் என்பதை முழு உலகமும் பார்க்கப் போகிறது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் எப்போதோ மறந்து விட்டது. ஒரே ஒரு குடும்பத்தின் நலனைக் காக்க, இந்திய நாட்டின் 60 ஆண்டு காலத்தையும் வீணாக்கிவிட்டது. இங்கே இந்திய மக்கள் பட்டினியில் வாடிய போது, அவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்குகளை துவங்கினர். ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்க்கும் இண்டியா கூட்டணிக்கு, ஜூன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது பெரிய அடி நிச்சயம் கிடைக்கும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி.,யினரின் இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. அம்பேத்கர் இல்லையென்றால் நேரு எஸ்சி, எஸ்டிகளுக்கு இடஒதுக்கீட்டை அனுமதித்திருக்க மாட்டார். காங்கிரஸ் விட்டுச் சென்ற குழிகளை நிரப்புவதற்காக எனது முதல் 10 ஆண்டுகளை நான் செலவிட்டுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.