நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இந்த மாத இறுதியில் இருக்கும். இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர்.
தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடனான மத்திய குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஜி.கே.நாகராஜ், கரு.நாகராஜன் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதை அடுத்து, தங்கள் கூட்டணியில் எந்தெ ந்த கட்சிகளை சேர்க்கலாம். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். தமிழகத்தில் நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பல்வேறு விஷயங்களை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.
நிர்வாகிகள் கூறிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு கொண்ட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள் என கூறியதோடு, வெற்றிக்கான சில வழிகளையும் நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று கட்சியினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடமும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டு, அதனை உடனே நிறைவேற்று வதற்கான நடவடிக்கை எடுங்கள். அடிக்கடி மக்களை சந்தித்து கொண்டே இருங்கள் என கூறினாராம். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் போட்டியிடக் கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க கோவை, நீலகிரி, திருப்பூர் , நெல்லை, ராமநாதபுரம், தென்சென்னை, நாகர்கோவில் உள்பட பல்வேறு தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது.
நீலகிரி தொகுதியில், மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எல்.முருகனும், நீலகிரி தொகுதிகளில் பணிகளை தொடங்கி விட்டார். எனவே பிரதமர் மோடி 25ம் தேதி பல்லடம்அடுத்த பொங்கலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.