மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது.. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கரில் தியானம் செய்தார். 2019-ல் இமயமலையில் கேதார்நாத் குகையில் மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார். இந்நிலையில் நடப்பு தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி இந்தியாவின் கடைகோடியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில்ள் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ள இருக்கிறார்.
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி டில்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 4.35 மணியளவில் வருகிறார். பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மாலை 5.30 மணியளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார்.
விவேகானந்தர் பாறை செல்லும் வழியில் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். வியாழக்கிழமை மாலையில் இருந்து ஜூன் 1-ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்கிறார். அவர் தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் செய்யவுள்ளார். இதற்காக பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டப பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஜூன் 1-ம் தேதி மாலை 3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். அதன்பின்னர், படகு மூலமாக கரை திரும்பும் பிரதமர் மோடி, மாலை 3.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலமாக டில்லி செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நேற்று படகு இல்லம் செல்லும் நுழைவு வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே சுற்றுலா பயணிகளை படகு சவாரிக்கு அனுமதித்தனர். சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பின்னர் டிக்கெட் எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறு மூண்டது. இதனால் நேற்று பகல் 12 மணியளவில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற நீர்ஆகாரங்களை பருக இருப்பதாக விவேகானந்தர் மண்டப பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி தியான மண்டபத்திலும், அவர் தங்கும் அறையிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை பகுதியில் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகின் வெள்ளோட்டமும் நடைபெற்றது.