Skip to content
Home » பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்

பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்

டில்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். அந்நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அதிபர் மெக்ரோனுடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன்.  நீண்டகால மற்றும் நம்பத்தக்க நட்புறவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து செல்வதற்கான விரிவான விவாதங்களை நடத்த உள்ளேன். 2022-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுக்கு கடைசியாக அரசு முறை பயணம் மேற்கொண்டதில் இருந்து பல முறை அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.  சமீபத்தில் நடப்பு மே மாதத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது அவரை சந்தித்தேன் என பிரதமர் மோடி கூறிய தகவல் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியை பிரான்ஸ் நாட்டுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று உள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் தேசிய தினத்தில், அணிவகுப்பு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய முப்படைகள் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கிறது. இப்பயணத்தின்போது, பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த ஆண்டு, இந்தியா-பிரான்ஸ் ராணுவ உறவின் 25-வது ஆண்டு ஆகும். கலாசாரம், அறிவியல், பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். பிரதமர் மோடியை கவுரவிக்கும்வகையில், அதிபர் மெக்ரோன், அரசாங்க விருந்து அளிக்கிறார். தனிப்பட்ட முறையில் இரவு விருந்தும் அளிக்கிறார். பிரான்ஸ் நாட்டு பிரதமரையும் மோடி சந்திக்கிறார். பிரான்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர், செனட் தலைவர் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார். மேலும், பிரதமர் மோடி, பிரான்சில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடுகிறார். இந்திய, பிரான்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திக்கிறார்.  பயணம் நிறைவடைந்ததும், வருகிற 15-ந்தேதி, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எரிசக்தி, கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, நிதிநுட்பம், பாதுகாப்பு, கலாசாரம் ஆகிய துறைகளில் விரிவான ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள். ஜி-20 மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய அரபு அமீரகம் அழைக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இருவரும் பேசுகிறார்கள். இத்தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கை மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!