இந்திய பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த அவர், நேற்று வரை தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு, தலைவர்கள் சந்திப்பு, விஞ்ஞானிகள் சந்திப்பு என பல தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், ஒருநாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் செல்வதற்காக தென்ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் கிரீஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ், பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர், இந்திய வம்சாவளியினரை சந்திப்பதற்காக கிராண்ட் பிரேடாக்னே ஓட்டலுக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி பேசினார்.