தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை 234 தொகுதிகளுக்கும் சென்று பிப்ரவரி 18 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அத்துடன் தமிழ்நாட்டில் பாஜக கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சித்தலைவர்களும் இதில் பங்கேற்கும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகைக்கு முன் தமிழ்நாட்டில் பாஜகவுடன் சேரும் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, இந்த கூட்டத்தை பாஜகவின் தேர்தல் பிரசார கூட்டம் போல நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே உள்ள திட்டப்படி இந்த யாத்திரை சென்னையில் நிறைவடையும் வகையில் இருந்தது. பாஜக கோவை, திருப்பூர், நீலகிரி தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் 3 தொகுதிகளுக்கும் பொதுவான பல்லடத்தில் இந்த விழாவை பல்லடத்தில் ஏற்பாடு செய்துள்ளனர். கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து மக்களை திரட்டி வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்தார். பின்னர் 19ம் தேதி கேலோ இந்தியா விழாவை சென்னையில் தொடங்கி வைத்து விட்டு 20ம் தேதி திருச்சி திருவரங்கம் வந்தார். அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்கிய பிரதமர் மோடி 21ம் தேதி அரிச்சல்முனை சென்று விட்டு டில்லி திரும்பினார். இப்போது 3வது முறையாக தமிழகம் வர திட்டமிட்டு உள்ளார்.