Skip to content

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக பேசி வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் கொண்ட தென் பகுதிகளில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களுடன் ஜே.பி.நட்டா  ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை அதிக அளவு பா.ஜ.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்று மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு, கட்சி உள்கட்டமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் அவர் மாநில தலைவர்களுடன் விவாதித்தார்.தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த தொகுதியை தேர்வு செய்ய ஆய்வு பணி நடந்து வருவதாகவும் மாநில தலைவர்களிடம் ஜே.பி. நட்டா தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். பிறகு அவர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று இந்த தடவையும் 2 தொகுதிகளில் போட்டியிட மோடி திட்டமிட்டுள்ளார். வாரணாசியிலும், தென் மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் களம் இறங்க அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.  பெரும்பாலான வட மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில், தென் மாநிலத்தில் போட்டியிடுவதன் மூலம் பா.ஜ.க. செல்வாக்கை  தென் மாநிலங்களில் மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கருதுவதாக தெரிகிறது.

தென் மாநிலங்களில் எந்த தொகுதியில் போட்டியிட்டால் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தனர். பெரும்பாலானவர்  பிரதமர் மோடி , ஆந்திரா அல்லது தமிழகத்தில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

ஏற்கனவே இதுபற்றி ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரதமர் மோடியை போட்டியிட வைக்கலாம் என்று மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.  ராமநாதபுரம் தொகுதியில் தான் ராமேஸ்வரம் உள்ளது. இது இந்துக்களின் முக்கிய சேத்திரமாக கருதப்படுகிறது. இதுபோல கன்னியாகுமரியும் முக்கிய சேத்திரமாக இந்துக்கள் பார்க்கிறார்கள்.

எனவே இந்த இரண்டில் ஒரு தொகுதியில் இருந்து போட்டியிட சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.  பெரும்பாலும் கன்னியாகுமரி தொகுதி சாதி ரீதியான வாக்கு வங்கி உடைய தொகுதி என்பதால், ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.  ராமநாதபுரம் தொகுதியில் தற்போது நவாஸ் கனி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன.  அதே நேரத்தில் 2021ல் நடந்த சட்டமன்ற தொகுதியில்  ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அடங்கிய 6 தொகுதிகளிலும் திமுக4, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி  பெற்று உள்ளது.

அதாவது மக்களவை தேர்தலில் நவாஸ்கனி வாங்கிய வாக்குகளை விட இப்போது 6 தொகுதிகளிலும் திமுக, காங் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளனர். எனவே ராமநாதபுரம்  அவ்வளவு பாதுகாப்புகாக இருக்குமா என்ற கேள்வியும் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான  கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் தான் போட்டியிடுவார் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!