உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.
43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டனர். கேப்டன் ரோகித்
அடைந்த கவலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆறுதல் கூறுவாரின்றி உள்ளுக்குள் தேம்பினார். இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மயான அமைதியாய் மைதானத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்கிவிட்டு சென்றார். இந்திய வீரர்களை மைதானத்தில் சந்திக்க வில்லையே என ரசிகர்கள் குமுறினர். இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் தோல்வியடைந்த இந்திய அணி வீரர்களை அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பிரதமர் மோடி சந்தித்தார். தோல்வியால் துவண்டு கிடந்த வீரர்களின் தோளில் தட்டி, கைகுலுக்கி உற்சாகப்படுத்தினார். ஒரு தாய்போல வீரர்களை தேற்றினார். குறிப்பாக வீரர் ஷமியை தன் மார்போடு சேர்த்து அணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார். இப்படியாக அனைத்து வீரர்களையும் ஆறுதல் படுத்தி உற்சாகப்படுத்தினார். டில்லியில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். பிரதமர் கூறிய இந்த ஆறுதல் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் தோல்விக்கு மருந்தாக அமைந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.