உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தொழிலாளர்களை அதன் வழியாகவே ஒருவர் பின் ஒருவராக இரவு 8 மணி அளவில் மீட்டுவரத்தொடங்கினர். அவர்கள், குழாய்க்குள், சக்கரங்கள் பொருத்திய ‘ஸ்டிரெச்சர்கள்’ மூலம் மீட்டுவரப்பட்டனர்.
வெளியே வந்த தொழிலாளர்கள், 17 நாட்களுக்கு பின் முதல் முறையாக ‘வெளிக் காற்றை’ சுவாசித்தனர். அவர்களை, சுரங்கப்பாதை பகுதியில் முகாமிட்டிருந்த முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டதால் தொழிலாளர்கள் ஓரளவு ஆரோக்கியமாகவே காணப்பட்டனர்.
ஒருவர் பின் ஒருவராக 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சுரங்கப்பாதை பகுதியில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுரங்கப்பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர்கள் உடல் நலம் குறித்து அன்போடு விசாரித்தார். முன்னதாக ‘மீட்கப்பட்ட தொழிலாளர்கள் யாருக்கும் உடல்நிலை மோசமாக இல்லை. ஆனாலும் அவர்கள் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்’ என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், உணவு, உறக்கம் மறந்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினருக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா, பல நாட்களுக்கு சவாலான சூழலை எதிர்கொண்ட தொழிலாளர்களின் மனஉறுதிக்கு வணக்கம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.