நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 4-ம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி 3வது முறையாக உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் நடக்கிறது. பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோரும் சென்றனர். பிரதமர் மோடியின் வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் பெயரில் அசையா சொத்துகள், சொந்தமாக கார் இல்லை எனவும், அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏவும், குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏவும் படித்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2019-ல் 2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.