நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்கள் புதுடில்லிக்கு வர உள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வார்நாம்கியேல் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பதவிகள் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் அமித் ஷா ராஜ்நாத் சிங் விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.