கேரளாவில் உள்ள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்து உள்ளது. அதில், பிரதமர் மோடியின் கேரள பயணத்தின்போது, தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடும் வகையில் வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, சுரேந்திரன் அதனை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார். இதுபற்றிய விவரங்கள் நேற்று வெளிவந்து உள்ளது. இந்த மிரட்டல் கடிதம் பற்றி போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். கடிதம் அனுப்பிய நபர் என்.கே. ஜானி என அதில் குறிப்பிட்டு உள்ளார். கொச்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. எனினும் அவர், ஜோசப் ஜான் நாடுமுத்தமிழ் என்றும் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நடந்தது போன்று நடக்கும் என கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது. எனினும், இதுபற்றி ஜானியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும் தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய நபர் இந்த அச்சுறுத்தல் கடிதத்திற்கு பின்னணியில் இருக்க கூடும் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அந்த கடிதம் மலையாளத்தில் எழுதப்பட்டு உள்ளது. ஜானியின் கையெழுத்தும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும் ஒன்றாக இல்லாத நிலையில், போலீசாரிடம் சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்களை ஜானி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், வி.வி.ஐ.பி. பாதுகாப்பு திட்ட விவரங்களை கசிய விட்டதற்காக கேரள போலீசாருக்கு பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் தனது கண்டனங்களை தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரது பெயர் சேவியர் என போலீசார் இன்று தெரிவித்தனர். இதுபற்றி கொச்சி நகர காவல் ஆணையாளர் சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, குற்றவாளியான சேவியர் கைது செய்யப்பட்டு உள்ளார். தனிப்பட்ட பகைமையால் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர், தனது அண்டை வீட்டுக்காரரை மாட்டி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடிதம் எழுதி உள்ளார். தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் அவரை நாங்கள் கண்டறிந்தோம். கொச்சிக்கு வருகை தரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 2060 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.