புதிய பிஎட்7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சூக் மாண்டவியா,சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தநிலையில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.