தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் எட்டரை லட்சம் பேர் பிளஸ்2 தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும். கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இதனை சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக இன்று காலை 9 மணிக்கே பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர், கல்வி அதிகாரிகள், கல்வித்துறை செயலாளர் ஆகியோர் தயார் நிலையில் அங்கு வந்து விட்டனர். ஆனால் அமைச்சர் மகேஷ் காலை 10 மணி வரை அங்கு வரவில்லை.
இதனால் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த எட்டரை லட்சம் மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும் பரபரப்புக்கு உள்ளானார்கள். இது குறித்து கல்வித்துறை அலுவலகத்துக்கு போனில் தொடர்பு கொண்டனர். அப்போது தான் அமைச்சர் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.
விசாரித்ததில் அவர், திருச்சியில் இருந்து விமானத்தில் வருகிறார் என அதிகாரிகள் கூறினர். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் டென்ஷன் ஏற்பட்டது. ஒருவழியாக அவர் 10 .10 மணிக்கு அவர் வந்தார். அதன் பிறகே ரிசல்ட் வெளியானது.
ரிசல்ட் வெளியடுவதை விட கல்வித்துறை அமைச்சருக்கு திருச்சியில் அப்படி என்ன முக்கியமான பணி இருந்தது என எட்டரை லட்சம் மாணவர்களும் கொந்தளித்தனர். இப்படி ஒரு முக்கியமான நிகழ்ச்சியை கூட சரியான நேரத்தில் பங்கேற்று நடத்தாத கல்வித்துறை அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதை வெளியிடுவதற்கு அமைச்சர் எதற்கு? அதிகாரிகளே போதுமே என மக்கள் கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டும் தனது சொந்த ஊரில் ஏதோ நிகழ்ச்சி இருக்கிறது எனக்கூறி தேர்வு ரிசல்டை 2 நாள் தாமதமாக வெளியிட்டார் இந்த அமைச்சர் மகேஷ். முதல்வர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.