தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டினார். நீளமான மஞ்சள் கயிற்றில் ஒரு பெரிய மஞ்சளை கட்டி அதை மாணவிக்கு கட்டினார். அவரும் அதை ஏற்றுக்கொண்டு புதுப்பெண் போல நாணத்துடன் தலைகுனிந்து நின்றார். அத்துடன் விட்டுவிடவில்லை. தாலி கட்டியதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.
28ம் தேதி இந்த சம்பவம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் திரண்டு வந்து சிறுவனை கண்டித்து உள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
அன்று இரவே சிறுமி, சிறுவனுடன் மாயமாகிவிட்டார். இது குறித்து சிறுமியின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பால்ய விவாக ஜோடியை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த ஜோடி சிக்கிக்கொண்டது. இருவரையும் அழைத்து வந்து புத்திமதி கூறினர். பின்னர் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இருவரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, பள்ளி வளாகத்திலேயே மாணவன் மாணவிக்கு தாலி கட்டி இருக்கிறான். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சரியான முறையில் வழி நடத்தாமல் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் வழங்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும், ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே பள்ளி அமைந்துள்ளதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மேலும் இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.