பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் இந்த தேர்வு எழுதுகிறார்கள். மார்ச் 25ம் தேதி வரை தேர்வு நடக்கும்.
தமிழகம் புதுச்சேரியில் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்கிறார்கள் . இவர்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பேர் மாணவியர். சிறைவாசிகள்145 பேர் எழுதுகிறார்கள்.
தமிழகம், புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறைக் கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 20 ஆயிரத்து 476 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு மொழிப்பாடத்தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர் முன்னதாக 9 மணி அளவில் தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வந்தனர். சில பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரார்த்தை செய்து தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை 10மணிக்கு தேர்வு அறையில் விடைத்தாள் வழங்கப்பட்டது. அதன் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை எழுதும்வகையில் 5 நிமிட நேரம் வழங்கப்பட்டது. பின்னர் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. கேள்வித்தாள் படித்துப்பார்க்க 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இன்ற தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
5ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.