தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கியது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் இந்த தேர்வை எழுதினர். இதற்காக 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இன்றுடன் தேர்வு முடிந்தது. இன்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய தேர்வுகள் நடந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து மாணவ, மாணவிகள் தேர்வு அறையை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர்.
கடைசி தேர்வு என்பதால் இன்று தேர்வு நடந்த பள்ளி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த புத்தகங்களை காற்றில் பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றனர். பிளஸ்2 தேர்வு முடிவுகள், மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளன.