Skip to content
Home » விளையாட்டு போட்டியில் மாணவன் உயிரிழப்பு… அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

விளையாட்டு போட்டியில் மாணவன் உயிரிழப்பு… அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் சரவணன்- நித்யா தம்பதியினரின் மகன் ரிஷி பாலன்(17). இவர் செம்பனார்கோவில் தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசு சார்பில் நடைபெற்ற தரங்கம்பாடி மண்டல அளவிலான குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார்.

400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ரிஷிபாலன் மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக ரிஷிபாலனை பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரிஷிபாலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அறிந்து வந்த மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் மாணவன் ரிஷி பாலன் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், மாணவன் ரிஷி பாலன் மதியம் மூன்று மணிக்கு மயங்கி விழுந்ததாகவும் ஆனால் மாணவனை மாலை 6 மணிக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மாணவன் மயங்கிய தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள் மாணவன் மயங்கி விழுந்தவுடன் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றும் மாணவனின் உயிரிழப்பிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினர் அனைவரின் பொறுப்பின்மையால் மாணவன் உயிரிழந்ததாக பொறையார் காவல் நிலையத்தில் மாணவனின் தாயார் நித்யா புகார்  அளித்தார்.

மாணவனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி  மறியல் போராட்டம் நடந்தது.  பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது. மாணவனின் மரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!