மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ் என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம் இன்று நடந்தது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. திட்டக்குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆட்சி சக்கரத்தை இயக்குவோர்களாக நாங்கள் இருந்தாலும் அதற்கு வழிகாட்டுவோர்களாக திட்டக்குழு உள்ளது. ஆட்சி நிர்வாகம் செல்லும் பாதையை தீர்மானிப்பவர்களாக மட்டுமன்றி அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து சொல்வதாகவும் திட்டக்குழு உள்ளது. எனக்கும் அமைச்சரவைக்கும் ஆட்சிக்கும் மிக மிக முக்கியமான வழிகாட்டியாக திட்டக்குழு உள்ளது.
மாநில திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன்முதலாக அமைத்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களையும் தன்னிறைவுபெற்ற மாவட்டமாக உருவாக்கினோம். நிதிவளத்தை பெருக்கும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை கூறும் வகையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.
ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியிலும் இருக்கக் கூடாது; சமூக ரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கவனம் பெறாத துறைகளுக்கான புதிய திட்டங்களை உருவாக்க மாநில திட்டக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், மு. தீனபந்து, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ். சுதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.