ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு பக்கமும், எதிர் அணியில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா ஆகியோர் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அரசியல் செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 67 தொகுதிகளில் வெற்றி பெறும். தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜெகன் மோகன் பெரிய அளவில் தோற்ப்பார். ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 15 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஏராளமான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது தாய் மற்றும் சகோதரியை தனக்கு சாதகமாக வைத்திருக்க தவறி விட்டார்.
கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தாகி விட்டது. ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நினைக்கிறார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.