தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று மாலை 4.45 மணிக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், வாகனம் செல்ல ஒத்துழைப்பு தருமாறு விஜயகாந்தின் இறுதி ஊர்வல வாகனத்தில் உள்ள பிரேமலதா ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாகனம் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி இருப்பதால் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் மெதுவாக நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக வாகனம் செல்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.