நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது, விரட்டியடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைப்போல இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.
நேற்று முன்தினம் இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள மீன்கள், வலை, மற்றும் தொழில் உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர். 2-வது நாளாக இன்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்திய நாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி 20 லிட்டர் டீசல், செல்போன், ஜிபிஎஸ் கருவி , வாக்கி டாக்கி, பேட்டரி போன்ற கருவிகளையும் கொள்ளையடித்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் நாகை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
ஏற்கனவே கடற் கொள்ளையர் அட்டகாசம் குறித்து தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். இதனால் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது மீனவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.