மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கு இன்று விளக்கம் கொடுத்துள்ளார். குறிப்பாக ‘தி ஸ்கின் டாக்டர்’ என்ற ஐடி பிரகாஷ் ராஜ் இன்று மதியம் 3 மணிக்கு பாஜகவில் இணைய இருக்கிறார் என்று ட்வீட் செய்திருந்தது.
இந்த ட்வீட்டை அவர் கோட் செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ‘பாஜகவினர் அதற்கு முயற்சி செய்தார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், அவர்களது சித்தாந்தங்களை வைத்து என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
அரசியலில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே நடிகர் பிரகாஷ் ராஜ் கொண்டிருக்கிறார். பல சமயங்களில் இதை வெளிப்படுத்தவும் இவர் தயங்கியதில்லை. கடந்த 2019 பொதுத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி லடாக்கில் உண்ணாவிரதம் இருந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை பிரகாஷ் ராஜ் தனது பிறந்தநாளான மார்ச் 26 அன்று சந்தித்து, தனது ஆதரவை சோனத்திற்கு தெரிவித்தார்.