திருச்சி மாநகர் மற்றும் ஸ்ரீரங்கம் இடையில் ஏற்கனவே சிறிய பாலம் இருந்தது. மக்கள் தொகை, வாகன பெருக்கத்தின் காரணமாக அந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தான் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஒரே நேரத்தில் 3 பஸ்கள் தாரளமாக செல்ல முடியும்.
ஆனாலும் நகரின் வளர்ச்சி, போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக அந்த பாலமும் இப்போது நெருக்கடி மிகுந்ததாகவே இருக்கிறது. எனவே மேலும் ஒரு புதிய பாலம் அந்த பாலத்தின் அருகிலேயே கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்கு புறத்தில் திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து மாம்பழச்சாலை வரை 5045 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் அகலம் உள்ள நடைபாதையுடன் சேர்த்து 17 .75 மீட்டர் அகலத்தில் நான்கு வழித்தடங்களுடன் அமைகிறது. இதற்காக ரூபாய் 106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலம் கட்டுமானத்துக்கு ரூபாய் 68 கோடியும் நில அளவை ஆர்ஜிதத்துக்கு ரூபாய் முப்பது கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன இது தவிர அணுகு சாலைகள் ரவுண்டானா கட்டுமானம் மின் வசதி மின் கம்பங்கள் உள்ளிட்ட வகைகளை மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்காக மீதி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இப்ப பாலப்பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி எஸ்.டி. இன்பிரா நிறுவனம் இந்த பாலத்தை கட்டுகிறது.
இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாஇன்று நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் , மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, பகுதி செயலாளர்கள் மதிவாணன், ராம்குமார், காஜாமலை விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.