Skip to content
Home » வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர். இதுபோன்ற பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒரு மாதமாக முறையாக வாகன பதிவெண்களை பராமரிக்காத நபர்களை பிடித்து போலீசார் எச்சரித்து வந்தனர். இந்தநிலையில் பதிவெண்களை முறைகேடாக அமைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் இன்று அதிரடியாக தொடங்கினர். சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது. முதல்முறை சிக்கினால் ரூ.500 அபராதமும் 2-வது முறை பிடிபட்டால் ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு தலைமையிலான போலீசார் பதிவெண்களை முறையாக எழுதாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இது தொடர்பான நோட்டீஸ்களையும் வண்டியில் ஒட்டினர். சென்னை மாநகரம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!