தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி, அவரது அரைநூற்றாண்டுப் பொதுவாழ்க்கை குறித்து “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்டக் திமுக ஏற்பாட்டில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இதை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் பாாத்திபன் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டனர். தினமும் ஏராளமான மக்கள் இதனை பார்வையிட்டு வருகிறார்கள்.
கடந்த சில தினங்களாக வெளிஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சென்னை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மகளிர் தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இன்று காலை முதல்வர் ஸ்டாலின், ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை நேரில் சென்ற பார்வையிட்டார். நெருக்கடி நிலை காலத்தில் அவர் சிறையில் சிறைத்துறையினரால் அனுபவித்த அடி, உதை போன்ற சித்ரவதைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சியை பார்த்த முதல்வர், சிறை கொட்டடி போல அமைக்கப்பட்டிருந்த அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள திண்ணையில் அமர்ந்து பார்த்தார்.
இளைஞர் அணி தொடங்கப்பட்ட காலத்தில் சைக்கிளிலேயே சென்று பிரசார பணிகளில் ஈடுபட்டதையும், பேரணி சென்றதையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஓட்டும் ஸ்டாலின் சிலையையும் சிறிது நேரம் கூர்ந்து கவனித்தார். அப்போது உடனிருந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் இளமையில் திமுகவை வளர்த்த தனது பணி குறித்து விளக்கியும் கூறினார்.