திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனுநீதி முகாம் நடத்தி வருகிறார். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகள், பொதுவான கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் எழுத்துபூர்வ மனுக்கள் கொடுப்பார்கள். அந்த மனுக்களை பெறும் கலெக்டர் சில கோரிக்கைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வினை அளிப்பார்.
சில கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார். இதன் மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இதற்காகவே திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2009ம் ஆண்டு முதல் மக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கிறார்கள். இவர்கள் மனுநீதி முகாம் நடைபெறும் கூட்டரங்கில் அமர்ந்து இருப்பார்கள்.
ஆனால் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகிலேயே பலர் அமர்ந்து மனுஎழுதி கொடுக்கிறார்கள். இவர்கள் வெளியூர்களில் இருந்து வரும் மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து தங்களிடம் மனு எழுதிக்கொண்டு போனால் தான் உள்ளே விடுவார்கள் என கூறி அவர்களிடம் இருந்து ரூ.100, 150 என வசூலித்து விடுகிறார்கள். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா லோகநாத் கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் மனுநீதி நாள் முகாமுக்கு வருபவர்களிடம் அதிக பணம் வசூலித்து மனு எழுதி கொடுக்கும் வெளியாட்களை அப்புறபடுத்தும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இன்று வெளியாட்கள் அனைவரும் போலீசாரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
4 மாற்றுத்திறனாளிகள் மட்டும் மனு எழுதிக்கொடுக்க கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். அவர்களும் அதிக பணம் வசூலிக்காமல் குறைந்தபட்சம் ரூ.10 என்ற அளவில் வசூலித்துக்கொள்ள கலெக்டர் கூறி உள்ளார். கெடுபிடியாக மக்களை பிடித்து மனு எழுதி கொடுக்கும் நபர்கள் இன்று இல்லாததால் வெளியூர் மக்கள் நிம்மதியாக வந்து மனு கொடுத்தனர். கெடுபிடி வசூலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதற்காக பொதுமக்கள் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாருக்குபாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.